Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

கவிதைச் சோலை

கவிதை என்பது ஓர் ஆச்சரியம். சில கோடுகள், சில வளைவுகள் ஓர் அழகிய ஓவியமாக வடிவெடுப்பதைப் போல, சில வார்த்தைகள் நயமான உணர்வுகளோடு ஒன்றும்போது அபாரமான கவிதைகளாக உருமாறுகின்றன.

நுட்பமான உணர்வுகள் துளிர்விடும் கவிதைச் சோலைகள் இன்று வற்றிவிட்டதால்தான் மனிதர்கள் மனத்தில் வன்முறை, சுயநலம், வக்கிர உணர்வுகள் என்னும் முட்செடிகள் படர்ந்து எதற்கும் உதவாத களர்நிலமாக இன்று மனித இனம் மாறிக்கொண்டிருக்கிறது. உள்ளத்தில் அன்பு என்னும் ஈரம் இருந்தால் மனதில் காளான்களைப் போலக் கவிதைகள் தானாக முளைக்கும். அன்புதான் எல்லாக் கவிதைகளுக்குள்ளும் உறங்கிக் கொண்டிருக்கும் ஒரே வித்து. அதுதான் “சின்னஞ்சிறு கிளியாகவும்”,  “செம்புலப் பெயல் நீர்போலக் கலக்கும் அன்புடை நெஞ்சங்களாகவும்”, “ஜெய் ஹோ”வாகவும், “தக்க சிறு பிறைநுதலாகவும்”, “மாசறு பொன்னாகவும், வலம்புரி முத்தாகவும்” பரிணமித்து பிறவிப்பயனை நாம் பெறுவதற்கு உதவும் அரிய கருவியாக விளங்குகிறது.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு இதயம் இருப்பதைப் போல ஒவ்வொரு இதயத்திற்குள்ளும் ஒரு கவிஞன் இருக்கிறான். அந்தக் கவிஞன்தான் இன்னொரு கவிஞனின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அகம் மகிழ்கிறான். இத்தகைய உணர்வுகளைத் தக்க உள்ளங்களுடன் பரிமாறிக்கொள்வதற்கான  களம்தான் இந்தத் தளம்.

இந்தத் தளத்திற்குத் தங்கள் வருகைக்கு மிக்க நன்றி! தங்கள் வாழ்க்கை சிறக்க வாழ்த்துக்கள்!

என்றும் அன்புடன்,

ஜெயன்.